புதுடெல்லி, ஜன 19 - உலகளாவிய பிரச்சனைகளை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தனது ‘அமைதி வாரியம்’ (Board of Peace) முயற்சியில் இணைவதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளதாக, நேற்று வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த தகவலை புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த திட்டத்தில் இந்தியா அல்லது பாகிஸ்தான் இணைவார்களா என்பது தற்போது தெளிவாக இல்லை. ஆரம்ப கட்டத்தில் இந்த முயற்சி காசா பகுதியில் கவனம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளிநாட்டு அமைச்சகம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவுக்கான அழைப்பு, நியூ டெல்லி–வாஷிங்டன் உறவுகள் தற்போது அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியை குறைக்கும் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததே இதற்குக் காரணமாகும்.
தற்போது இந்தியாவின் ஏற்றுமதிகளுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது; இது உலகிலேயே உயர்ந்த வரிகளில் ஒன்றாகும்.
பாகிஸ்தான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில்,“ஐக்கிய நாடுகள் தீர்மானங்களுக்கு ஏற்ப, பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நீடித்த தீர்வு கிடைக்கும் வகையில், காசாவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச முயற்சிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபடும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக டிரம்ப் இதுவரை சுமார் 60 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


