கோலாலம்பூர், ஜனவரி 16 — மக்களுக்கான அடிப்படை தேவைகள் மிகவும் ஒழுங்காக, இலக்கு நோக்கிய முறையிலும், தொடர்ச்சியாகவும் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக சும்பங்கான் அசாஸ் ரஹ்மா (சாரா) உதவி திட்ட செயல் முறைகளில் சில மேம்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்றிரவு பேஸ்புக் பதிவொன்றில், மொத்தம் 3.1 மில்லியன் தனிநபர்களும் தங்களது மை கார்டை பொருள் வாங்குதலுக்கு சாரா உதவியைப் பெறுவதன் மூலம், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க மடாணி அரசாங்கம் கொண்ட உறுதிப் பாட்டுடன் இந்த நடவடிக்கை இசைவானதாக உள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார்.இந்த முன்முயற்சி பண உதவி மட்டும் அல்ல, மாறாக சாரா வலையமைப்பில் சிறு வணிகர்களின் பங்களிப்பின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை புத்துணர்ச்சி பெறச் செய்வதும் கூட என்றார் அவர்.
"சாரா வலையமைப்பில் சிறிய கடைகளின் பங்கேற்பு நாடு முழுவதும் 10,000 வர்த்தக நிலையங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதனால் நாட்டின் செல்வம் மையம் படுத்தப் படாமல், நகரங்கள், பேரூர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறு வணிகர்களுக்கு திரும்பிப் பாய்கிறது," என்று அவர் விளக்கினார்.
அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளில் யாரும் புறக்கணிக்கப் படவோ அல்லது பின் தங்கவோ இல்லை என்பதை மடாணி அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்றார் அன்வார்.
"இதுதான் மடாணி பண்பு. அதாவது, மடாணி பொருளாதார கட்டமைப்பின் லட்சியங்களுக்கிணங்க, நீதி, அமைதி மற்றும் பொது செழிப்பை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் எதிர் காலத்தைக் கட்டியெழுப்ப நாம் இணைந்து முன்னேறுவோம்," என்று அவர் முடித்தார்.
தனிநபர்களுக்கான சாரா திட்டத்தின் உதவி இன்று முதல் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் மாதத்திற்கு RM100 வரை பெறுவர், இது அவர்களின் மைக்கார்டுக்கு வரவு செய்யப்படும்.
பதிவு பெற்ற பேரங்காடிகளில் இன்றியமையாத பொருட்களை வாங்க இதைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், ஜனவரி 9 முதல் தொடங்கப்பட்ட 2026 மாதாந்திர சாரா உதவி விநியோகத்தில் ஐந்து மில்லியன் பேர் உள்ளடக்கப் பட்டுள்ளனர்.
இதில் 3.7 மில்லியன் குடும்பங்கள் மற்றும் 1.3 மில்லியன் திருமணமாகாத மூத்த குடிமக்கள் அடங்குவர். 3.1 மில்லியன் திருமணமாகாத நபர்களுக்கான விநியோகம் இன்று தொடங்கியது.மொத்தத்தில், 2026 மாதாந்திர சாரா திட்டத்தில் 8.1 மில்லியன் பேர் உள்ளடக்கப் பட்டுள்ளனர், இதற்கு RM8 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-இல் இது 5.4 மில்லியன் பேருக்கும் RM5 பில்லியன் ஒதுக்கீடாக இருந்தது.


