சிட்னி, ஜன 16 — உலகிலேயே முதன்முறையாக 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
தடை விதிக்கப்பட்ட ஒரு மாதத்தில், சமூக ஊடக நிறுவனங்கள் ஆஸ்திரேலிய இளைஞர்களுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் கணக்குகளை கூட்டாக செயலிழக்கச் செய்துள்ளதாக, அந்நாட்டின் இணைய ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இது இந்நடவடிக்கை விரைவான மற்றும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான அறிகுறியாகும்.
டிசம்பர் 10 அன்று செயல்பாட்டுக்கு வந்த சட்டத்திற்கு இணங்க, 16 வயதுக்குட்பட்டவர்கள் வைத்திருந்த சுமார் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகளை இதுவரை முடக்கியுள்ளதாக e Safety ஆணையர் தெரிவித்தார்.
"இப்போது இச்சட்டம் செயல்படுகிறது என்று நாங்கள் அறிவிக்க முடியும்," என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.
"இச்செயல் ஆஸ்திரேலியாவின் பெருமைக்கு ஓர் ஆதாரம் ஆகும். இது உலகளவில் முன்னணி சட்டம், ஆனால், இப்போது தான் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது."
தடையை அமல்படுத்துவது உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை அதிகாரிகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. பிரான்ஸ், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இதே போன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளன.
சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்க மாநிலங்களும் ஆஸ்திரேலியாவைப் பின்பற்றுவது குறித்து விவாதித்து வருகின்றன.


