கோலாலம்பூர், ஜன 16 - மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும், விரைவுப் போக்குவரத்து அமைப்பு (ஆர்.தி.எஸ்) திட்டத்தின் கட்டுமானப் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. மேலும் இத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டமிட்டபடி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் பெரும்பாலான உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை பொருத்தப்படும் கட்டத்தில் நுழைந்திருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
"நிலையத்தின் உள்ளே அதன் கட்டிடம் மற்றும் கட்டமைப்பு நிறைவடைந்துள்ளது. ஆனால் தற்போது நாங்கள் ஒரு அமைப்பை நிறுவுகிறோம். அதை நிறுவியதும், அதற்கான சோதனை நடத்தப்படும். இது மிகவும் முக்கியமான கட்டம், ஏனெனில், அந்த சோதனை இல்லாமல், இத்திட்டம் செயல்பட முடியாது. எனவே, அடுத்த சில மாதங்களில் பல சோதனைகள் மேற்கொள்ளப்படும். ஜோகூரில், இரயில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது" என்றார் அவர்.
பெட்டாலிங் ஜெயாவில் REHDA நிறுவனம் ஏற்பாடு செய்த 2026-ஆம் ஆண்டு The CEO Series மாநாட்டில் உரையாற்றியப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
மேலும், ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்.தி.எஸ் இணைப்புத் திட்டத்திற்கான கூட்டு எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான புதிய சட்ட மசோதாவை இயற்றுவது குறித்து நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லோக் தெரிவித்தார்.
பெர்னாமா


