ஷா ஆலாம், ஜனவரி 15: ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடாவில் அமைந்துள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் ஆலயத்தில் இன்று தைப்பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாகத் கொண்டாடப்பட்டது.
அதிகாலை 7:00 மணி அளவில் ஆலயத்தின் நித்ய பூஜைகளுடன் விழா இனிதே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, காலை 8:00 மணியளவில் ஆலய வளாகத்தில் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது.
"பொங்கலோ பொங்கல்" என்ற முழக்கத்துடன் மங்கல இசை முழங்க, பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பொங்கலிட்டுத் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 9:00 மணியளவில் அன்னை ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மனுக்கு விசேஷ பூஜைகளும், மஹா தீபாராதனையும் காட்டப்பட்டன.
தைப்பொங்கலை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பூஜைக்குப் பின்னர், வருகை தந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" என்ற உயரிய தத்துவத்திற்கு ஏற்ப, பக்தர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
இவ்வாண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரங்களாக அறிவிக்கப்பட்ட காலை மற்றும் மாலை வேளைகளிலும் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர்.


