ஷா ஆலம், 15 ஜனவரி: கிள்ளான் பகுதியில் உள்ள ரமலான் சந்தைகளில் வியாபாரம் செய்ய விரும்பும் வர்த்தகர்கள், தங்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு நிலுவையிலுள்ள அனைத்து அபராதக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
அபராதத்தைச் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கிள்ளான் அரச மாநகர சபையின் கார்ப்பரேட் தகவல் தொடர்பு இயக்குனர் நோர்ஃபிசா மஹ்ஃபிஸ் தெரிவித்ததாக 'தி ஸ்டார்' (The Star) செய்தி வெளியிட்டுள்ளது.
"நிலுவைத் தொகை வைத்திருப்பவர்கள் வியாபாரம் செய்யத் தடை செய்யப்படுவார்கள்," என்று கூறிய அவர், விண்ணப்பங்கள் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டு, தாமான் ஸ்ரீ அண்டலாஸ், தெலுக் புலாய் சிம்பாங் எம்பாட், கம்போங் மேரு மற்றும் ரந்தாவ் பாஞ்சாங் லோரோங் முஸ்ரான் உட்பட நகரின் 23 இடங்களில் மொத்தம் 1,405 ரமலான் சந்தை இடங்களை கிள்ளான் அரச மாநகர சபை ஒதுக்கியுள்ளது.
தகுதியுள்ள வர்த்தகர்களுக்குக் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், கடை வகையைப் பொறுத்து விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார். "இரவுச் சந்தை இடங்களில் சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் கடைகளுக்குக் கட்டணம் RM 310 ஆகும். இரவுச் சந்தை அல்லாத இடங்களில் அமையும் கடைகளுக்குக் கட்டணம் RM350 ஆகும்."
இந்தக் கட்டணத்தில் சந்தை காலத்தில் மேற்கொள்ளப்படும் குப்பை சேகரிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளுக்கான செலவுகளும் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். இதற்கிடையில், ஜாலான் தைப்பிங்கில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நோன்புப் பெருநாள் சந்தைக்காக 343 இடங்களை ஒதுக்கியுள்ளது.
இந்தச் சந்தைகள் பிப்ரவரி 18 முதல் மார்ச் 19 வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, வர்த்தகர்கள் 03-33586513 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது mylesen.mbdk.gov.my என்ற அகப்பக்கத்தைப் பார்வையிடலாம்.


