ஷா ஆலம், 15 ஜனவரி: பந்திங், கம்போங் ஓலக் லெம்பிட், ஜாலான் 5 தொழில்துறை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு தொழிற்சாலைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இரவு 10.03 மணிக்கு தங்களுக்குப் புகார் வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி நடவடிக்கை இயக்குனர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். "இந்தத் தீ விபத்து ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்டதுடன், அந்த வளாகத்திற்குள் வெடிப்புச் சம்பவமும் நிகழ்ந்தது. தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக 'தற்காப்பு' (defensive) முறையில் அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தீயணைப்புப் படையினர் தீயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அதிகாலை 1.15 மணியளவில் மேலும் இரண்டு தொழிற்சாலைகளுக்குத் தீ பரவியது. "இந்த விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் 100 விழுக்காடு அழிந்தன, மற்ற இரண்டு தொழிற்சாலைகள் முறையே சேதமடைந்தன. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை," என்று அவர் கூறினார்.




