பக்திப் பரவசம்: சபரிமலைக்கு புறப்பட்டது புனித திருவாபரண ஊர்வலம் - தந்தையின் அன்பும் வரலாறும்!

14 ஜனவரி 2026, 9:48 AM
பக்திப் பரவசம்: சபரிமலைக்கு புறப்பட்டது புனித திருவாபரண ஊர்வலம் - தந்தையின் அன்பும் வரலாறும்!

பந்தளம் ஜன 14: சபரிமலை ஐயப்ப சுவாமியின் சிகர நிகழ்வான மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, பந்தளம் அரண்மனையிலிருந்து புனித திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் இன்று பக்திப் பரவசத்துடன் சபரிமலை நோக்கிப் புறப்பட்டது.

சுமார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பந்தள தேசத்தை ஆண்ட ராஜசேகர பாண்டிய மன்னன், பம்பை நதிக்கரையில் கண்டெடுத்த குழந்தை மணிகண்டன். தனது வளர்ப்பு மகன் ஒரு தெய்வ அவதாரம் என்பதை உணர்ந்த மன்னர், அவர் சபரிமலையில் தவக்கோலம் பூணும் வேளையில் அவருக்கு அணிவித்து மகிழ தங்க ஆபரணங்களை உருவாக்கினார்.

இதுவே ‘திருவாபரணம்’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமி ஐயப்பனின் அவதார நோக்கம் நிறைவேறிய பின், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி அன்று இந்த ஆபரணங்களை அவருக்கு அணிவிக்க வேண்டும் என்பது ஐயப்பனின் கட்டளையாகக் கருதப்படுகிறது.

திருவாபரணங்கள் மூன்று பிரதான பெட்டிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.  இதில் ஐயப்பனின் தங்கத் திருமுகம், பிரபா மண்டலம், நவரத்தின மாலைகள், மற்றும் பொன்னால் ஆன புலி மற்றும் யானை வாகனங்கள் உள்ளன.

 இதில் மாளிகைப்புரத்தம்மனுக்குத் தேவையான பூஜா பாத்திரங்களும், சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப் பயன்படும் தங்கக் குடமும் உள்ளன. இதில் யானைக்கான நெற்றிப்பட்டம், கொடிகள் மற்றும் ஊர்வல குடைகள் இடம்பெற்றுள்ளன.

பந்தளத்தில் இருந்து சபரிமலை வரையிலான 83 கிலோமீட்டர் தூர நடைப்பயணத்தில், வானில் ‘கிருஷ்ணப் பருந்து’ ஒன்று வட்டமிட்டு ஊர்வலத்திற்கு வழிகாட்டி வருவது இன்றும் ஒரு தீராத அதிசயமாகும். பந்தள மன்னரின் பிரதிநிதி ஒருவரால் இந்த ஆபரணங்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து செல்லப்படுகின்றன

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.