கோலாலம்பூர், ஜன 14- கோலாலம்பூர், அங்காசாபுரி விஸ்மா ரேடியோவில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மின்னல் எப்எம்-மின் 2026-ஆம் ஆண்டிற்கான மறுமலர்ச்சியுடன் கூடிய நிகழ்ச்சி வடிவமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
கடந்த 1946-ஆம் ஆண்டு முதல் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் இந்த வானொலி நிலையம், 'ரேடியோ 6' என்ற நிலையிலிருந்து 1998-இல் மின்னல் எப்எம் ஆக உருவெடுத்தது. அன்று டத்தோ ஸ்ரீ துன் சாமிவேலு அவர்கள் முன் புதிய வடிவமைப்பு செய்யப்பட்ட அதன் நிகழ்வுகள், இருபது ஆண்டுகளுக்கு பின், என் முன் மீண்டும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மறுமலர்ச்சியுடன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மின்னல் எப்எம் மேற்கொள்ளும் இந்த மாற்றம் பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார். நவீனமயமாக்கல், புதிய நிகழ்ச்சி வடிவங்கள் மற்றும் துடிப்புமிக்க அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் மின்னல் எப்எம் தனது நேயர்களுக்குத் தொடர்ந்து முதன்மைத் தேர்வாக இருக்கும் என்று துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
மின்னல் எப்எம்-மின் "பாரம்பரியத்திலிருந்து பரிணாமத்திற்கு: வெறும் குரல் மட்டுமல்ல, அது நமது அடையாளம்" (Dari Legasi Ke Evolusi: Bukan Sekadar Suara Malah Identiti) எனும் புதிய தாரக மந்திரம், அதன் ஆழமான வரலாற்றையும் எதிர்கால நோக்கத்தையும் பறைசாற்றுவதாக அமைந்தது.
இந்தச் சாதனையை முன்னெடுத்துச் சென்ற மின்னல் எப்எம் குழுவினர், ஆர்.டி.எம் (RTM) வானொலிப் பிரிவு இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக 24 மணிநேரமும் உலகெங்கும் உள்ள தமிழ் நேயர்களை இணைக்கும் பாலமாக மின்னல் எப்எம் தொடர்ந்து இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது



