கோலா லங்காட், ஜன 13 : கடந்த அக்டோபரில் புயலால் பாதிக்கப்பட்ட சிஜாங்காங் ஜெயாவில் உள்ள மூன்று பள்ளிகள் சரி செய்யப்பட்டுள்ளன. இதற்கு மலேசிய கல்வி அமைச்சகத்தால் RM12.9 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சிஜாங்காங் ஜெயா தேசியப்பள்ளி, கம்போங் மேடான் தேசியப்பள்ளி மற்றும் சிஜாங்காங் ஜெயா இடைநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பழுதுபார்க்கும் பணி சிலாங்கூர் பொதுப்பணித் துறையால் (JKR) அசல் தேதியை விட முன்னதாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது என டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"அனைத்து முக்கிய பணிகளும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி அமர்வு நேற்று இடையூறு இல்லாமல் தொடங்க முடிந்தது," என்று சிஜாங்காங் ஜெயா தேசியப்பள்ளியில் நடைபெற்ற ஒப்படைப்பு விழாவில் மீடியா சிலாங்கூரிடம் அமிருடின் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு பள்ளியான ஜாலான் தஞ்சோங் தேசியப்பள்ளி, ஜனவரி 26 அன்று முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கம்போங் மேடான் தேசியப்பள்ளியில் சேதமடைந்த புதிய மண்டபத்தைக் கட்டுவதற்கு RM900,000 ஒதுக்கீட்டிற்கு கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“புயலால் சேதமடைந்தவைகளை மாற்றுவதற்கு கல்வி அமைச்சகம் மேசைகள், நாற்காலிகள், தளவாடங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களையும் வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மத்தியில் ஏற்பட்ட புயலால் கோலா லங்காட் பகுதியில் உள்ள பல பள்ளிகள் கடுமையான சேதத்தை சந்தித்தன. இது மாணவர்களின் பாதுகாப்பைப் பாதித்தது மற்றும் வளாகத்தை தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.



