ஷா ஆலம், ஜனவரி 8-சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் பந்திங்கில் உள்ள பூசாட் தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி மற்றும் தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள லடாங் கடோங் தமிழ்ப்பள்ளி ஆகிய இரண்டு தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலப் பட்டா நகல் மற்றும் நில ஆவணங்களை வழங்கினார்.
இந்த நிலப் பட்டா நகல் வழங்குவதன் நோக்கம், ஒவ்வொரு பள்ளியும் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு இருப்பதை உறுதி செய்வதாகும் என்று அவர் வலியுறுத்தினார். இது நிர்வாகம், தணிக்கை, வசதி மேம்பாட்டுத் திட்டமிடல் மற்றும் சட்டரீதியான விவகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப் படலாம். இந்த இரண்டு பள்ளிகளுக்கான விண்ணப்பங்களும் 2021 முதல் 2022 ஆம் ஆண்டுக்குள் சமர்ப்பிக்கப்பட்டு முழுமையான ஆய்வுக்குப் பிறகு இந்த நிலையை எட்டியுள்ளது.
நில உரிமைப் பட்டா இல்லாதது பள்ளி மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுத்தலுக்கு தடையாக அமையும்,ஆகையால் நில உரிம செயல்முறை மிகவும் முக்கியமானது. “உதாரணமாக பூசாட் தெலுக் டத்தோ, வளங்களைப் பயன்படுத்தி ஒரு திறந்தவெளி திடல் கட்ட விரும்பியது. ஆனால், நில உரிமை நிலை தீர்க்கப்படும் வரை இந்தத் திட்டத்தை தொடர முடியவில்லை”. எனவே, ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில், இந்த இரண்டு பள்ளிகளுக்கான பிரச்சனையை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்த குழுவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதே நேரத்தில், ஆறு தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளில் நிலவும் நிலப் பிரச்சனைகளை தீர்க்கவும் இக்குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் விரைவில் ஒரு முழுமையான மற்றும் நேர்மறையான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பள்ளிகளுக்கான நில உரிமை பிரச்சினையை தீர்த்தது, சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புச் செயலாக்கக் குழுவால் அடையப்பட்ட மற்றொரு முக்கியமான சாதனையாகும்.


