கோலாலம்பூர், ஜன 8 - கடந்த 5 ஆண்டுகளில் 61,000க்கும் அதிகமான மலேசியர்கள் தங்களது குடியுரிமையை கைவிட்டுள்ளனர் என தேசியப் பதிவு இலாகா தகவல் வெளியிட்டுள்ளது.
மலேசியா இரட்டை குடியுரிமையை அனுமதிக்காததால், வெளிநாட்டு குடியுரிமை பெறுவோர் தங்களது மலேசியக் குடியுரிமையை கைவிட வேண்டிய கட்டாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமையை கைவிட்டவர்களில் 93 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூருக்கு இடம்பெயருவதையே தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா (2.15 சதவீதம்) மற்றும் புருணை (0.97 சதவீதம்) தேர்வு இடங்களாக அமைந்துள்ளன என தேசியப் பதிவு இலாகா தலைமை இயக்குநர் டத்தோ பட்ருல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில் 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே அதிக அளவில் குடியுரிமை கைவிடுப்பவர்களாக உள்ளனர் என தகவல்கள் காட்டுகின்றன. இந்த முடிவுக்கு பொருளாதார வாய்ப்புகள் மற்றும் குடும்பம் ஆகியவையே முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூரில் வேலை, நிலையான வருமானம் மற்றும் குடியுரிமை பெறும் சாத்தியம் மலேசியர்களை ஈர்த்து வருவதாக அவர் விளக்கினார்.


