ஷா ஆலம், ஜனவரி 5- நாடு முழுவதும் உள்ள பழுதடைந்த சமயப் பள்ளிகள் (SAR) மற்றும் மாஹாட் தாஃபிஸ் வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரிங்கிட் உடனடி நிதியை வழங்கியுள்ளது.
தேசிய கல்வி அமைப்பின் கீழ் வராத சமயப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் அரசாங்கப் பள்ளிகளுக்கு இணையான வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வதே இந்த ஒதுக்கீட்டின் நோக்கம் என்று பிரதமர் தெரிவித்தார்.
“தேசியப் பள்ளித் திட்டத்தில் சேர்க்கப்படாவிட்டாலும், சமயப் பள்ளிகளில் சுமார் 300,000 மாணவர்கள் உள்ளனர். இதற்கு முன்பு அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி ரத்து செய்யப்பட்டது. எனவே, பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தவும், போதுமான வசதிகளை வழங்கவும் இந்த பள்ளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையை (JAKIM) நாங்கள் கேட்டுக்கொண்டோம்,” என்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறை (JPM) ஊழியர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டு புத்தாண்டுச் செய்தியை வழங்கியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பழுதடைந்த வசதிப் பிரச்சினைகளை இன்னும் எதிர்கொள்ளும் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு (SJKT) 50 மில்லியன் ரிங்கிட்டும், தேசிய வகைத் சீனப் பள்ளிகளுக்கு (SJKC) 80 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
“சில தேசிய வகைத் சீனப் பள்ளிகளில் பூமிபுத்ரா மற்றும் இந்திய மாணவர்களும் பயில்கின்றனர். இதற்கு முன்பு 50 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அது 80 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரை, பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இன்னும் பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே, அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது,” என்று அவர் விளக்கினார்.
தேசிய அமைப்பிற்கு வெளியே உள்ள பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான கற்றல் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றார் அவர்.


