ஷா ஆலம், ஜன 5: அடிப்படை ரஹ்மா பங்களிப்பு (சாரா) உதவித் தொகையான RM100, பிப்ரவரி 9ஆம் தேதி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களின் அடையாள அட்டையில் செலுத்தப்படும்.
ரமடான் மற்றும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடு முன் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் மக்களின் சுமையைக் குறைப்பதே இந்த உதவியின் நோக்கமாகும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்ராஜெயாவில் நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் கூறினார்.
சாரா என்பது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் அனைத்து மலேசியர்களுக்கும் வழங்கப்பட்ட ஒரு பண உதவியாகும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, 7,000க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட கடைகளில் இதைப் பயன்படுத்தலாம்.
முன்னதாக, சாரா ஒதுக்கீட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை செலவிடப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள தொகையில் டிசம்பர் 2025க்குள் பயன்படுத்தப்படாத நிலுவைத் தொகை ஏழைகளுக்கான திட்டங்களுக்கு மறுபகிர்வு செய்யப்படும் என்றும் அன்வார் அறிவித்தார்.
அதே நேரத்தில், 10,000க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள் சாரா திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
"இந்த ஆண்டு கிராமங்களில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களைப் பதிவு செய்வதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். சாரா திட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார்.


