கோலாலம்பூர், டிச 31 - மலேசிய குடிமக்களுக்கான விசா கட்டண தள்ளுபடியை அடுத்தாண்டு டிசம்பர் 31 வரை சீனா நீட்டித்துள்ளதாக மலேசியாவில் உள்ள அதன் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் ஒருமுறை நுழைவு விசாவுக்கான கட்டணம் சாதாரண சேவைக்கு 104 ரிங்கிட், எக்ஸ்பிரஸ் சேவைக்கு 246 ரிங்கிட் மற்றும் அவசர சேவைக்கு 324 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருமுறை நுழைவுக்கான விசா கட்டணம் சாதாரண சேவைக்கு 119 ரிங்கிட், எக்ஸ்பிரஸ் சேவைக்கு 261 ரிங்கிட் மற்றும் அவசர சேவைக்கு 339 ரிங்கிட் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பலமுறை நுழைவு விசாவுக்கான கட்டணம் சாதாரண சேவைக்கு 141 ரிங்கிட், எக்ஸ்பிரஸ் சேவைக்கு 283 ரிங்கிட் மற்றும் அவசர சேவைக்கு 361 ரிங்கிட் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், 12 மாதப் பலமுறை நுழைவு விசாவிற்கான கட்டணம், சாதாரண சேவைக்கு 171 ரிங்கிட், எக்ஸ்பிரஸ் சேவைக்கு 313 ரிங்கிட் மற்றும் அவசர சேவைக்கு 391 ரிங்கிட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசா விண்ணப்பங்களுக்கான செயலாக்க காலம், சாதாரண சேவைக்கு நான்கு வேலை நாட்கள், எக்ஸ்பிரஸ் சேவைக்கு மூன்று வேலை நாட்கள் மற்றும் அவசர சேவைக்கு இரண்டு வேலை நாட்கள் தேவைப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.


