ஷா ஆலம், நவ 19 — குறைந்த வருமானக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் சுமையை குறைத்து, அவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஆதரிக்க, மாநில அரசு சத்தான உணவு வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மாணவர்கள் சமநிலையான உணவை உட்கொள்வதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், கற்றல் அமர்வுகளின் போது அவர்களின் கவனம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீட் கூறினார்.
“அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி முன்னேற்றத்தை உருவாக்குவதோடு, பள்ளிகளில் உணவு ஊட்டச்சத்து திட்டங்களுக்கு மாநில பட்ஜெட் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றார்.
“இது மாணவர்களின் நலனுக்கான ஒரு முக்கிய திட்டமாகும்,” என்று அவர் சிலாங்கூர் சட்டமன்ற அமர்வில் 2026 நிதி வழங்கல் மசோதாவைப் பற்றிய விவாதத்தின் போது தெரிவித்தார்.
மாணவர் முன்னேற்றத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பள்ளி வருகையை ஊக்குவிக்க உதவிய சுகாதார அமைச்சகத்தின் பள்ளிகளில் சத்தான உணவு வழங்கல் திட்டத்தை (HiTS) சிலாங்கூர் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார்.
கடந்த ஆண்டு, மலேசிய குழந்தைகளில் காணப்படும் உணவு குறைபாடு பிரச்சனையை சமாளிக்கும் 2023–2030 தேசிய மூலோபாய திட்டத்தில் உள்ள மூன்று முக்கிய முன் முயற்சிகளில் ஒன்றாக HiTS திட்டத்தை துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி அறிவித்தார்.
நாட்டின் 277 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப் பட்ட இந்தத் திட்டம், மாணவர்களின் எடை குறைவதில், மேலும் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியின் முன்னேற்றம் காண்பதில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




