பூச்சோங், நவம்பர் 1 — சிப்பாங் நகராண்மைக்- கழகம் (MPSepang), அடிக்கடி கனமழை பெய்யும் போது ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தை குறைக்கும் நோக்கில் தாமான் மாஸ் மற்றும் புத்ரா பிரிமா பகுதிகளின் முக்கிய வடிகால் அமைப்பில் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகள் குறித்து நகரசபை உறுப்பினர் மொஹ்த் நஸ்ரி சோஹோட் தெரிவித்ததாவது,RM3 மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம் பழைய வடிகால்கள் அதிக அளவு மழைநீரை ஏற்கக்கூடிய பெரிய U-வடிவ வடிகால்களாக மாற்றுவதை உள்ளடக்கியதாகும்.
“முந்தைய வடிகால்கள் சிறியதாகவும் அடிக்கடி மணல் மற்றும் குப்பைகளால் அடை படுவையாகவும் இருந்ததால், மழைநீர் சாலைகளில் வழிந்தோடும். இந்த மேம்பாட்டுத் திட்டம், மழை நீரின் ஓட்டம் சீராக நடைபெறுவதற்காக உடனடி நடவடிக்கையாக அமல்படுத்தப்படுகிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூர் உடன் நடைபெற்ற களப்பயணத்தின் போது தெரிவித்தார்.
நஸ்ரி மேலும் கூறியதாவது, காம்போங் ஸ்ரீ அமான் மாஸ் பகுதியும் தற்போது MPSepang கண்காணிப்பின் கீழ் இருப்பதால், வடிகால் பராமரிப்பு பணிகளை மேலும் முறையாக மேற்கொள்ள முடிகிறது.
“இந்தப் பணிகள் இரு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, வடிகால் அமைப்பு மழைநீரை கையாள முடியாத நிலை ஏற்பட்டது, அந்த நிலை மீண்டும் நிகழாதவாறு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.”
அவர் மேலும், மக்கள் வடிகால்களின் சுத்தத்தைக் காக்கவும், குப்பை போடுவதில் இருந்து விலகவும் கேட்டுக்கொண்டார், இதனால் திட்டத்தின் நீண்டகால பயன் உறுதி செய்யப்படலாம் என்றார்.
சிப்பாங் நகராண்மைக்கழகம் “MPSepang, வரவிருக்கும் மழைக்காலத்திற்கான தயாரிப்பாக, அடைபட்ட அனைத்து வடிகால்களையும் சீரமைத்து மறுகட்டமைக்க உறுதியாக செயல்படுகிறது,” என்றார் நஸ்ரி.
இந்த மேம்பாட்டு திட்டம் திடீர் வெள்ள அபாயத்தை குறைத்து, உள்ளூர் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்தும் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்ததார்.




