கோத்தா கினபாலு, பிப் 26: பியூபோர்ட் மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் ஆற்று நீர் மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ஐந்து சாலைகள் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன. மேலும், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து சாலைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், தற்போதைக்கு மாற்று வழிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் சபா பொதுப்பணித் துறை (JKR) இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சாலைகள் ஜாலான் பின்டூக்கா, ஜாலான் எஸ்.ஆர்.கே பத்து 60, ஜாலான் லுமாத்தாய், ஜாலான் பினுனுக் மற்றும் ஜாலான் லுவாகான் ஆகும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இது தவிர, பெட்ரோனாஸ் பக்காலாவு அருகே உள்ள கோத்தா கினபாலு-சிந்துமின் சாலையில் ஆற்று நீர் அபாயகரமான அளவில் இருப்பதால், ஒரு வழி மட்டுமே போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளது.
"அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ஜாலான் ஹாஜி அக்பர் கான் சாலையை மாற்று வழியாகப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தை (TMP) நிறுவுவது போன்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், பாதிக்கப்பட்ட சாலைகளின் நிலை அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றும் சபா பொதுப்பணித் துறை தெரிவித்தது.
இதனிடையே, வெள்ளப்பெருக்கு மெம்பாக்குட் மற்றும் பியூபோர்ட் ரயில் நிலையங்களைப் பாதித்துள்ளதால், அப்பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் பயணிக்க முடியாத நிலையில் உள்ளன என்று சபா மாநில ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கோத்தா கினபாலுவில் உள்ள செம்புலான் நிலையத்திலிருந்து பியூபோர்ட் வரையிலான ரயில் சேவை, தற்போதைக்கு போங்காவான் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அதே வேளையில், பியூபோர்ட்-செம்புலான் மார்க்கத்துக்கான சேவை போங்காவான் நிலையத்திலிருந்து தொடங்கும்.






