ஷா ஆலம், செப் 11: ஒருமுறை வழங்கப்படும் RM100 அடிப்படை ரஹ்மா உதவி தொகைக்கு (சாரா) எந்த பதிவு செயல்முறையும் தேவையில்லை. ஏனெனில், தகுதியுள்ளவர்களுக்கு விண்ணப்பம் இன்றி அந்த உதவி வழங்கப்படும் என்று துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
மேலும், சாராவை பெற பதிவு அவசியம் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"நிதி அமைச்சகத்திடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சாராவின் கீழ் நீங்கள் RM100 உதவியைப் பெற விரும்பினால், பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. உண்மையில் அந்த நடவடிக்கை தேவையில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சாரா பதிவு தொடர்பாக வெளியிடப்பட்ட போலி பதிவுகளின் எண்ணிக்கை குறித்த விரிவான அறிக்கையை தனது அமைச்சகம் பெறவில்லை என்றும் தியோ கூறினார்.
கூடுதலாக, 2025ஆம் ஆண்டில் 18 வயது பூர்த்தியடையாதவர்கள், கடந்த ஜூலை மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த மை கார்டு மூலம் இன்னும் உதவியைப் பெறலாம் என்று அவர் கூறினார்.
"ஒருவேளை அவர்களுக்கு இப்போது 17 வயது 10 மாதங்கள் இருக்கலாம். இரண்டு மாதங்களில் தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள், எனவே அவர்களும் தகுதியுடையவர்கள்" என்று அவர் கூறினார்.