ஷா ஆலம், ஆக. 29 - கிள்ளான், ஜாலான் செமெந்தா உத்தாமா வட்டாரத்தில் நேற்று நடத்தப்பட்ட நடவடிக்கையில், காலாவதியான, நெளிந்த மற்றும் துருப்பிடித்த டின்களில் அடைக்கப்பட்ட 13 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை அரச கிள்ளான் மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) பறிமுதல் செய்தது.
உணவுப் பாதுகாப்பு அம்சங்களை வணிகர்கள் எப்போதும் கடைபிடிப்பதை உறுதி செய்யும் நோக்கில் நடைபெற்ற இந்நடவடிக்கையில், எட்டு மினி மார்க்கெட்டுகள் மற்றும் மளிகைக் கடைகளில் உணவு ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகர் மன்றம் தெரிவித்தது.
இந்த பறிமுதல் நடவடிக்கையைத் தவிர்த்து, வணிக உரிமம் இல்லாதது, வளாகம் தூய்மையின்றி காணப்பட்டது மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ளாதது ஆகிய குற்றங்களுக்காக ஐந்து குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்று மாநகர மன்றம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
பொருட்களின் கையிருப்பில் உள்ள விற்பனைப் பொருட்களை தொடர்ந்து கண்காணித்து, அவை நல்ல நிலையிலும் வளாகம் சுத்தமாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் வணிகர்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
வர்த்தகர்கள் தங்கள் வளாகத்தின் தூய்மையைப் பராமரிக்கவும், பயனீட்டாளர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்க வேண்டாமென மாநகர் மன்றம் அறிவுறுத்துகிறது என அந்த அறிக்கை கூறியது.