ஜோகூர் பாரு, ஜூலை 22 - சமூக ஊடகத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட
போலி இணைய முதலீட்டுத் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட 57 வயது ஆடவர்
தனது சேமிப்புத் தொகையான 267,888 வெள்ளியை இழந்தார்.
முதலீட்டு முகவர் என கூறிக்கொண்ட நபரிடம் தாம் ஏமாற்றப்பட்டதை
உணர்ந்த அந்த ஆடவர் நேற்று பெலாங்கி இண்டா போலீஸ் நிலையத்தில்
இது குறித்து புகார் அளித்ததாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் கூறினார்.
பேஸ்புக் பதிவில் வெளியான முதலீடு தொடர்பான விளம்பரத்தினால்
கவரப்பட்ட அந்த ஆடவர் ஒலிவியா லியோங் என்ற பெண்ணை
வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த முதலீட்டின் வாயிலாக குறுகிய காலத்தில் 80 விழுக்காடு வரை
லாபம் ஈட்ட முடியும் என்று சந்தேக நபரான அந்த பெண்மணி
கூறியுள்ளார். பின்னர் செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்து ஜோர்ஜ்
என்ற நபருடன் பணப் பரிமாற்றம் தொடர்பான விவகாரங்களை
கையாளும்படி பாதிக்கப்பட்ட நபர் பணிக்கப்பட்டார்.
முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத் தொகையை மீட்க முற்பட்ட போது
கூடுதலாக முதலீடு செய்யும்படி உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து தாம்
ஏமாற்றப்பட்டதை அந்த ஆடவர் உணர்ந்ததாக அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
கடந்த ஜூலை 4 முதல் 17 வரை ஒன்பது பரிவர்த்தனைகள் மூலம்
நிறுவனம் ஒன்றின் வங்கிக் கணக்கிற்கு மொத்தம் 267,888 வெள்ளியை
மாற்றியுள்ளார் என அவர் மேலும் சொன்னார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை,
பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.







