டாக்கா, ஜூலை 22 - வங்காளதேச இராணுவத்திற்குச் சொந்தமான பயிற்சி போர் விமானம் ஒன்று கல்லூரி வளாகத்தில் விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட குறைந்தது 19 பேர் உயிரிழந்ததோடு மேலும் 164 பேர் காயமடைந்தனர்.
டாக்காவின் குர்மிடோலாவில் உள்ள வங்காளதேச விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாகப் பிற்பகல் 1.06 மணிக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 BGI ஜெட் விமானம் புறப்பட்டது. எனினும் பயணத்தின் போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் சமி உத் தௌலா சவுத்ரி தெரிவித்தார்.
விமானத்தை மக்கள் அடர்த்தியான பகுதிகளிலிருந்து திசை திருப்ப விமானி கடுமையாக முயற்சியை மேற்கொண்டார். இருந்தபோதிலும், விமானம் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தின் மீது மோதியது என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் விமானியும் ஒருவர் என்று ராணுவம் கூறியது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சமி உத் கூறினார்.
இத்துயரச் சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் வங்காளதேசத்திற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
வங்காளதேசம் இந்த சோகத்தை நினைவுகூரும் வகையில் செவ்வாய்க்கிழமையை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. விபத்தின் காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.








