கூச்சிங், ஜூலை 22 - பட்டறை ஒன்றில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது கார் திடீரென விழுந்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.03 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்தது.
சம்பவ இடத்தை அடைந்தபோது, பட்டறையில் டோயோட்டா ஹைலக்ஸ் நான்கு சக்கர இயக்க வாகனத்தின் கீழ் ஆடவர் ஒருவர் சிக்கிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அது குறிப்பிட்டது.
மீட்புக் குழுவினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை மீட்டனர். அவரது உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என அத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
இதற்கிடையில், அந்த 22 வயது நபருக்கு நேர்ந்த இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், மிரி காவல் நிலையத்தை 085-427093 என்ற எண்ணில் அல்லது இன்ஸ்பெக்டர் நிக்சன் மலாங்கை 016-8865949 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மிரி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஃபர்ஹான் லீ அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
சமூக ஊடகங்களில் சம்பவம் தொடர்பான படங்களைப் பரப்பவோ அல்லது பதிவேற்றவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.








