புத்ராஜெயா, ஜூலை 16 - நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சில நியமனங்கள் தொடர்பில் தாமதங்களும் கவலைகளும் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் அனைத்து முடிவுகளும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் எடுக்கப்பட்டன என அவர் கூறினார்.
நேற்று காலை ஆட்சியாளர்களின் மாநாட்டில் நான் நீண்ட கலந்துரையாடலை நடத்தினேன். அவர்கள் முடிவு செய்யட்டும் என்று நான் நினைக்கிறேன். நாளை எதிர்மறையான கருத்துக்கு முடிவுகட்டக்கூடிய தெளிவான அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் உயர்நெறி மற்றும் நிர்வாக முறை மீதான அனைத்துலக மாநாட்டில் ஆற்றிய உரையில் அவர் இதனைக் கூறினார்.
நீதித்துறை சுதந்திரத்தை மடாணி அரசாங்கம் மதிக்கிறது. பிரதமராக இருக்கும் காலத்தில் எந்தவொரு நீதிபதி அல்லது நீதிமன்ற வழக்கிலும் அது தலையிடாது என்று நிதியமைச்சருமான அன்வார் வலியுறுத்தினார்.
மேலும், இதன் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்போது நீதித்துறை சுதந்திரக் கோட்பாடு உட்பட (நிறுவன) சீர்திருத்தங்களுக்கு இந்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை நிரூபிக்கும் என்று நான் நம்புகிறேன் என அவர் சொன்னார்.








