ஈப்போ, ஜூலை 3 - ரப்பர் மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் அம்மரம் தம் மீதே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் இங்கிருந்து சுமார் 173 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்கலான் உலு, கம்போங் கிளியான் இண்டானில் நேற்று மாலை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் குறித்து தமது துறைக்கு மாலை 5.15 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகப் பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.
பெங்கலான் உலு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தீயணைப்புக் குழு சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் 76 வயதுடைய நபர் ஒருவர் தரையில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். அவரிடம் எந்த அசைவும் காணப்படவில்லை.சுகாதார அமைச்சின் பணியாளர்கள் நடத்திய பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது என அவர் சொன்னார்.
அந்த முதியவர் தனது தோட்டத்தில் ரப்பர் மரங்களை வெட்டி சாய்த்துக் கொண்டிருந்தபோது விழுந்த மரத்தால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அம்முதியவரின் உடல் ரப்பர் தோட்டத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.








