(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 2 - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்புக்கு சம்பவத்திற்கு யாரும் பொறுப்பானவர்கள் அல்ல என்ற அச்சம்பவம் தொடர்பான விசாரணையின் முடிவு குறித்து கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு எந்த தரப்பினரும் பொறுப்பானவர்கள் அல்ல என்ற முடிவை பாதிக்கப்பட்ட பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில்
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த வெடிச்சம்பவம் புத்ரா ஹைட்ஸில் உள்ள பல குடும்பங்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. இப்பேரிடரில் வீடுகள் சேதமடைந்தன. குடும்பங்கள் இடம்பெயர்ந்தன வாழ்க்கை சீர்குலைந்தது. மேலும் குடியிருப்பாளர்கள் இதுநாள் வரை அனுபவித்த பாதுகாப்பு உணர்வு ஆழமாக தகர்க்கப்பட்டது.
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பார்க்கையில் சமூகத்தின் மன அமைதியை மீட்டெடுப்பதற்கு முக்கியமான பல கேள்விகளுக்கு தீர்வு காணாமல் விஷயத்தை விசாரணை அறிக்கை மூடி மறைப்பது கவலையளிக்கிறது என அவர் சொன்னார்.
மண் நகர்வு மற்றும் நீர் தேங்கியதற்கு என்ன காரணம்? இந்த நிலைமை எப்போது தொடங்கியது? மண் நகர்வை கண்காணிக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு? என பல கேள்விகள் எழுகின்றன.
சுபாங் ஜெயா மாநகர் மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் புகார்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள், தளத்திற்கு அருகில் கனரக இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன. ஆது குறித்து விசாரணையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஏன்? என அவர் கேள்வியெழுப்பினார்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் மக்கள் மீதான அக்கறை உணர்வில் பொது நம்பிக்கையை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பெட்ரோனாஸ் நிறுவனத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.
1. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அவர்கள் அனுபவித்த துயரம் மற்றும் பொருள் இழப்புகளுக்கு நியாயமான மற்றும் சரியான நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும்.
2. மீண்டும் செயலாக்க அல்லது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விரிவான மற்றும் வெளிப்படையான பாதுகாப்பு விளக்கத்தை நடத்த வேண்டும்
3. நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் சமூக ஈடுபாட்டுத் திட்டத்திற்கு உறுதியளிக்கும் வகையில் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து தகவல் மற்றும் ஆலோசனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரகாஷ் வலியுறுத்தினார்.
இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக சிலாங்கூர் மந்திரி புசாருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.








