(ஆர்.ராஜா)
கிள்ளான், ஜூலை 2 - இங்குள்ள கம்போங் ஜாவா, ஏ எம்.ஜே. பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நீர் சேகரிப்பு குளத்தின் கட்டுமானம் தொடர்பான சிக்கல்களை ஆராய பொதுப்பணித் துறை, ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் கவுன்சிலர்களுடன் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கள ஆய்வினை மேற்கொண்டார்.
கனமழையின் போது வெள்ள நீர் நிரம்பி வழிந்து அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவது குறித்து குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்கள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இந்த வருகை மேற்கொள்ளப்பட்டதாகக் குணராஜ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
மழைநீர் ஓட்டத்தை மிகவும் திறம்பட கட்டுப்படுத்துவது, நீர் பெருக்கெடுப்பதையும் திடீர் வெள்ள அபாயத்தையும் குறைப்பது, நிலையான மற்றும் திறமையான நீண்டகால வடிகால் அமைப்பை வழங்குவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த வெள்ள நீர் சேகரிப்பு குளம் அமைக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
தற்போது நடைபெற்று வரும் வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து தொழில்நுட்பக் குழு விரிவான விளக்கத்தை வழங்கியது. இந்தத் திட்டம் உள்ளூர் மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதையும் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கத்தை அடைவதையும் உறுதிசெய்யக்கூடிய மேம்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்தத் திட்டம் வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன். மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்களின் முன்னுரிமையாகும் என அவர் குறிப்பிட்டார்.








