ஷா ஆலம், ஜூலை 2 - செல்லுபடியாகும் உரிமம் இன்றி வைப்புத்தொகை பெற்றது மற்றும் நான்கு ஆண்டுகளாகப் பணமோசடி செய்தது தொடர்பில் 'டத்தோ' அந்தஸ்து கொண்ட பெண்மணி உட்பட ஐந்து நபர்கள் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி முகமது அனாஸ் மஹாட்ஸிர் முன்னிலையில் தங்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை டத்தோ சுஹைலா செமாரு (வயது 41), அவரது சகோதரி சுராயா செமாரு (வயது 37), சகோதரர்களான முகமது வஹ்பா அஸ்-ஜுஹைலி முகமது அரிஃபின்(ஸயது 33), முகமது சியாபில் அஜ்வாத் முகமது அரிஃபின் (வயது 26) மற்றும் 30 வயதான மொஹமட் நூர் சௌக்கி ஷாபி ஆகியோர் மறுத்து விசாரணை கோரினர்.
எக்ஸ்பாக்ஸ் மார்க்கெட் சென் பெராஹாட் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் சுஹைலா, சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து 1.3 கோடி வெள்ளியைப் பெற்றது மற்றும் சொந்தமாக வைத்திருந்தது தொடர்பில் 22 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அதே நேரத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுரயா மீது மொத்தம் 1.11 கோடி வெள்ளியைப் பெற்றது, சொந்தமாக வைத்திருந்தது மற்றும் மாற்றியது ஆகிய 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து 25 வெள்ளியைப் பெற்று சொந்தமாக வைத்திருந்ததாக சயாக்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வஹ்பா 10.3 மில்லியன் வெள்ளியைப் பெற்றதாக ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளின் வழி 5.8 மில்லியன் வெள்ளி நிதியைப் பெற்றதாக சயாபில் ஏழு குற்றச்சாட்டுகளையும் அதனை அப்புறப்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார்.
கடந்த 2021 நவம்பர் முதல் கடந்த ஆண்டு ஜூலை வரை ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் வட்டாரத்திலுள்ள பல்வேறு வங்கிக் கிளைகளில் அவர்கள் இக்குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
2001ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் சட்டத்தின் 4(1)(பி)வது பிரிவின் கீழும் அதே சட்டத்தின் துணைப்பிரிவு 4(1) இன் கீழும் தண்டனை வழங்க வகை செய்யும் வகையில் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.








