ஈப்போ, ஜூன் 25 - ஆறாண்டுகளுக்கு முன்னர் 1.14 கிலோ கஞ்சா போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டிலிருந்து மூன்று நண்பர்கள் இன்று உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட முகமது நஸ்ரின் ஹசிம் அப்துல்லா சதார் (வயது 35), முகமது சுஹைமி அகமது (வயது 42) மற்றும் முகமமது ஷாபிக் சம்சுடின் (வயது 38) ஆகியோருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குச்சரண் சிங் ப்ரீத், தனது தீர்ப்பில் கூறினார்.
இதனால், அம்மூவரும் குற்றச்சாட்டிலிருந்தும் வழக்கிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருளின் அடையாளம் மற்றும் அவற்றின் எடையில் உள்ள சுமார் 90 கிராம் வேறுபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டின் முக்கிய கூறுகளை அரசுத் தரப்பு நிரூபிக்க முடியவில்லை என்பதை நீதிபதி பூபிந்தர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் தாமான் பிஞ்சி செனி, லாலுவான் பிஞ்சி செனி 4 எனும் முகவரியிலுள்ள உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை கடத்தியதாக மூவர் மீதும் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டத்தின் 39பி(1)(ஏ) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் பிரிவு 39பி2 இன் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.








