குவாந்தான், ஜூன் 7- ஜெராண்டுட், ஜாலான் ஜெராண்டுட் பெரியில் நேற்றிரவு நிகழ்ந்த இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.
பெரேடுவா பேஸ்ஸாமற்றும் டொயோட்டா அல்பார்ட் சம்பந்தப்பட்ட இந்த விபத்து நேற்று நள்ளிரவில் நிகழ்ந்ததாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் முகமது ரஸாம் தாஜா ரஹீம் கூறினார்.
பெரோடுவா பேஸ்ஸா காரில் பயணித்த 17 முதல் 26 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பயணிகள் காரிலேயே சிக்கிக்கொண்ட வேளையில் மூன்று பேர் வெளியே தூக்கியெறியப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் டொயோட்டா அல்பார்ட் வாகனத்தில் பயணித்தவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் நிகழ்ந்தபோது டொயோட்டா அல்பார்ட் பூலாவ் தாவாரில் இருந்து ஜெராண்டூட் நோக்கியும் பெரோடுவா பேஸ்ஸா பேராக்கின் போத்தாவிலிருந்து ஜெராண்டூட் நோக்கியும் பயணித்தது முதற்கட்ட விசாரணையில்
கண்டறியப்பட்டது.
காயமடைந்த மூன்று பேரும் மலேசிய சிவில் பாதுகாப்புப் படை ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக முகமது ரஸாம் கூறினார்.


