கோலா திரெங்கானு, மே 18- இல்லாத பங்கு முதலீட்டுத் திட்டத்தில் பங்கு கொண்ட பொறித்த கோழி உணவு வியாபாரி ஒருவர் 19,050 வெள்ளியை இழந்தார்.
பாதிக்கப்பட்ட வரான 38 வயதான பெண் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சமூக ஊடக தளமான முகநூலில் பங்கு முதலீடு தொடர்பான விளம்பரத்தைக் கண்டதாக கோல திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் கூறினார்.
அத்திட்டம் மீது ஆர்வம் கொண்ட அந்த மாது சந்தேக நபரைத் தொடர்பு கொண்டதாகவும் வெறும் 300 வெள்ளி மூலதனத்தின் வழி 20,060 வெள்ளி லாபத் தொகை திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாது இத்திட்டத்திற்காக பணத்தைச் செலுத்திய பிறகு ஜஹாரா மற்றும் மஸ்னா என அழைக்கப்படும் இரண்டு பெண்கள் லாபத்தைத் திரும்பப் பெற மேலும் பணத்தை செலுத்துமாறு கேட்டனர்.
பாதிக்கப்பட்ட மாதுவும் சேமிப்பு, நகை அடகு மற்றும் கடனாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி ஆறு முறை பணம் செலுத்தியுள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இன்னும் லாபம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தாம் ஏமாற்றப்பட்டதாக சந்தேகித்த பாதிக்கப்பட்டவர் நேற்று இரவு 8 மணிக்கு போலீசில் புகார் அளித்ததாகவும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அஸ்லி கூறினார்.








