நிபோங் திபால் - ஏப். 8- இங்குள்ள மாரா இளைநிலை அறிவியில்
கல்லூரியில் (எம்.ஆர்.எஸ்.எம்.) நிகழ்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட
பகடிவதை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை
அறிக்கையைத் திறந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைச் சித்தரிக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து
தாங்கள் ஆக்ககரமான முறையில் நடவடிக்கை கொண்டு சம்பந்தப்பட்ட
கல்லூரியை அடையாளம் கண்டு இதில் தொடர்புடைய மாணவர்களிடம்
வாக்குமூலம் பதிவு செய்ததாக செபராங் பிறை செலாத்தான் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜெய் ஜனுவாரி சியுவோ கூறினார்.
வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியது தொடர்பில் குற்றவியல்
சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் இந்த சம்பவம் குறித்து விசாரணை
நடத்தப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு நிமிடம் 31 வினாடிகள் கொண்ட
காணொளி நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் தங்கள் கவனத்திற்கு
வந்ததாக அவர் நேற்று கூறியிருந்தார்.
உறைவிடப் பள்ளியின் தங்கும் விடுதி என நம்பப்படும் இடத்தின் ஒரு
அறையில் ஒருவரை சிலர் பகடிவதை செய்வதை சித்தரிக்கும் காட்சி
அதில் பதிவாகியிருந்தது என அவர் சொன்னார்.
மாணவர் ஒருவரை அவரின் சகாக்கள் பகடிவதை செய்வதை சித்தரிக்கும்
காணொளி, கடந்தாண்டு மத்தியில் செபராங் பிறை செலாத்தானில் உள்ள
எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரியில் பதிவு செய்யப்பட்டது என்பதை முன்னதாகக்
காவல் துறையினர் உறுதிப்படுத்தியிருந்தனர்.


