கனடா, மார்ச் 10 - கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்கின்றார்.
லிபரல் கட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றதை அடுத்து, தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகால நட்பு நாடான அமெரிக்காவுடன் கனடா வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தத் தலைமைத்துவ மாற்றம் நடைபெறுகிறது.
பிரிட்டனிலும் கனடாவிலும் உள்ள மத்திய வங்கிகளின் முன்னாள் ஆளுநரான 59 வயதுடைய மார்க் கார்னி, கட்சித் தேர்தலில் 86 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.
பிரதமராகப் பதவி ஏற்றதும் அவர் விரைவில் அந்நாட்டின் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப், அந்நாட்டின் பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை செய்துள்ளார்.
டிரம்பை சமாளிக்க, மிகவும் நம்பகமான அரசியல்வாதியாகக் கனடா நாட்டு மக்கள் மார்க் கார்னியை அங்கீகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
லிபரல் கட்சியின் தலைவராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ஆம் ஆண்டு தொடங்கி கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தார்.
அந்நாட்டின், அரசியலிலும் பொருளாதார ரீதியிலும் தொடர்ந்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த அவர் பதவி விலகுவதாகக் கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


