கோலாலம்பூர், டிச. 28- சபா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் திங்கள்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
சபாவின் உட்புறப் பகுதிகள் (தம்புனான்), மேற்கு கடற்கரை, தாவாவ், (லஹாட் டத்து), சண்டகான் (தெலுபிட்) கினாபாத்தாங்கான், பெலுரான், கூடாட் ஆகியவையே பாதிக்கப்படும் பகுதிகளாகும் என்று அத்துறை கூறியது.
மேலும், கிளந்தான் மாநிலத்தின் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மாச்சாங், பாசீர் பூத்தே, கோல கிராய் ஆகிய பகுதிகளிலும் திரங்கானு மாநிலம் முழுமையாகவும் பகாங் மாநிலத்தின் குவாந்தான், ரொம்பின் மற்றும் பெக்கான்) ஆகிய இடங்களிலும் வரும் டிசம்பர் 31ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை இந்நிலை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு வானிலை நிலவரம் குறித்து பொது மக்கள் அறிந்திருக்கும் அதேவேளையில் வானிலை தொடர்பான விபரங்களை மலேசிய வானிலைத் துறையின் அகப்பக்கம் மற்றும் அத்துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.







