ஷா ஆலம், நவ. 20: தெலுக் பங்லிமா காராங், கோலா லங்காட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு சீன பிரஜைகள் உட்பட 16 பேரை காவல்துறையினர் நவம்பர் 9 ஆம் தேதி கைது செய்தனர்.
30 முதல் 50 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் தொழிற்சாலையில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோலா லங்காட் மாவட்ட காவல் துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் சுபியான் அமீன் தெரிவித்தார்.
அதற்கு முன்னர், பிற்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட தொழிற்சாலையின் மேலாளரான உள்ளூர் நபரிடமிருந்து அவரது தரப்பு புகார் பெற்றதாக முகமட் சுபியான் கூறினார்.
கோலா லங்காட் மாவட்டத் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்து கொள்ளையிட்ட பொருட்களை ஏற்றி சென்ற லாரியைக் கைப்பற்றினர், என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395 இன் கீழ் அனைத்து ஆண்களும் மேல் விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
– பெர்னாமா


