கோலாலம்பூர், நவ. 19 - டாம்பெல் எனப்படும் உடற்பயிற்சி சாதனத்தைப் பயன்படுத்தி தனது 17 வயது வளர்ப்பு மகனுக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக சலவைத் தொழிலாளி ஒருவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி சித்தி சகிரா மொஹ்தாருடின் முன்னிலையில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை லோ தியாம் வூன் (வயது 42) என்ற அந்த ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி இரவு 10.00 மணியளவில் ஜாலான் புத்ரா, டாங் வாங்கியில் உள்ள ஒரு குடியிருப்பில் இந்தக் குற்றத்தை புர்ந்ததாக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. .
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326ஏ பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 326 இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 18,000 வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கும் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ளவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்ற நிபந்தனைகளை விதிப்பதற்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நிட்சுவான் அப்துல் லத்திப் நீதிமன்றத்தில் முன்மொழிந்தார்.
தனது கட்சிக்காரருக்கு மனைவி மற்றும் பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகள் உள்ளதால் அவருக்கு குறைந்த ஜாமீன் தொகையை நிரணயிக்கும்படி எதிர்த்தரப்பு வழக்கறிஞர் மின்னி சியூ நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை அரசுத் தரப்பால் கோரப்பட்ட கூடுதல் நிபந்தனைகளுடன் 10,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கினார். இந்த வழக்கு டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


