ஷா ஆலம், நவ. 19- ஆயிரம் வெள்ளி உதவித் தொகையை உள்ளடக்கிய
மாநில அரசின் மரண சகாய நிதித் திட்டம் எளிதாகவும் சீராகவும்
மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு ஏற்ற செயல்முறைகளை
மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
தகுதியுள்ள வாரிசுகளுக்கு மட்டுமே இந்த மரண சகாய நிதி
சென்றடைவதை உறுதி செய்ய தேசிய பதிவுத் துறையின் (ஜே.பி.என்.)
ஒத்துழைப்பை நாடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில்
மேற்கொள்ளப்படும் என்று சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
மற்றவர்கள் (உண்மையான வாரிசுகள் அல்லாதவர்கள்) இந்த பணத்தைப்
பெறுவதை தடுக்க இந்நடவடிக்கை அவசியமாகிறது. மேலும் நிதி
வழங்கும் படலத்தை எளிதாக்கவும் நல்லடக்கச் சடங்குகளை
மேற்கொள்வதில் குடும்பத்தினர் எதிர்நோக்கும் சுமையை குறைக்கவும்
இயலும் என்றார் அவர்.
இவ்விவகாரத்தில் மாநில அரசு கவனக் குறைவாக இருக்க
விரும்பவில்லை. சில இடங்களில் நல்லடக்கச் சடங்குகளை மேற்கொள்ள
1,200 வெள்ளி வரை கட்டணம் விதிக்கப்படும் நிலையில் மக்களுக்கு
உதவும் மாநில அரசின் கடப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த திட்டம்
விளங்குகிறது என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று மரண சகாய நிதியை வழங்கும்
நடவடிக்கை மற்றும் அத்திட்டம் தொடர்பான ஆய்வு குறித்து பெர்மாத்தாங்
தொகுதி உறுப்பினர் நுருள் ஷியாஸ்வானி நோ எழுப்பிய துணைக்
கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் இநத மரண சகாய நிதித் திட்டத்தை
அமல்படுத்த 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு கோடி
வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டோர் உள்ளிட்ட
20,000 பேர் இத்திட்டத்தின் வழி பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


