(ஆர்.ராஜா)
ஷா ஆலம், நவ. 19 - மாநில அரசின் பைக்கேர்-1000 திட்டத்தின் வாயிலாக
கடந்த 2023ஆம் ஆண்டு 200 இளைஞர்கள் பயன் பெற்றதாக மனிதவளம்
மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பராய்டு தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு 200 விண்ணப்பங்கள்
பெறப்பட்ட வேளையில் அதில் நிர்ணயிக்கட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி
செய்த 100 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன அவர் கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று பைக்கேர்-1000 திட்டம் குறித்து விரிவாக
பேசிய பாப்பராய்டு, கிக் எனப்படும் தற்காலிக பொருளாதார
நடவடிக்கைகளில் அதாவது உணவு அல்லது பொருள் விநியோகத்தில்
ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன்
பணமாக 1,000 வெள்ளியை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக்
கொண்டுள்ளது என்றார்.
மனிதவளத் துறையின் கீழ் திட்டமிட்டுப்படும் முன்னெடுப்புகளை
வழிநடத்தும் பொறுப்பினை ஏற்றுள்ள சிலாங்கூர் தொழிலாளர் திறன்
மேம்பாட்டுப் பிரிவின் (யு.பி.பி.எஸ்.) வாயிலாக இந்த பைக்கேர்-1000
திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு
மோட்டார் சைக்கிள்களை ஒப்படைக்கும் நிகழ்வு இவ்வாண்டு ஆகஸ்டு
மாதம் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


