ரியோ டி ஜெனிரோ, நவ. 19 - காஸா தீபகற்பத்தில் மனிதாபிமான நிலை
மோசமடைந்து வருவது மற்றும் லெபனானில் பதற்றம் அதிகரித்து
வருவது குறித்து இங்கு கூடியுள்ள ஜி20 தலைவர்கள் ஆழ்ந்த கவலை
தெரிவித்துள்ளனர்.
காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் விரிவாக்கம் செய்யப்பட
வேண்டும் என்பதோடு பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு
அனைத்து தடைகளையும் அகற்றி பெரிய அளவில் மனிதாபிமான
உதவிகள் சென்றடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று
அத்தலைவர்கள் கடுமையான தொனியில் வெளியிட்ட அறிக்கை கூறியது.
காஸா தீபகற்பத்திலும் லெபனானிலும் நிலவும் மோசமான மனிதாபிமான
நிலை குறித்து எங்கள் கவலையை வெளிப்படுத்தும் அதேவேளையில்
மனிதாபிமான உதவிகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும்
என்றும் வலியுறுத்துகிறோம்.
அதே சமயம், பொது மக்களுக்கான பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட
வேண்டும். விரிவான அளவில் மனிதாபிமான உதவிகளை
மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து தடைகளும் அகற்றப்பட வேண்டும்
என அத்தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த நெருக்கடி காரணமாக மக்கள்
அனுபவித்து வரும் துன்பங்கள் மற்றும் மோசமான விளைவுகளையும்
ஜி20 தலைவர்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.
தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பாலஸ்தீனர்களுக்கு உள்ள
உரிமையை மறுவுறுதிப்படுத்திய அத்தலைவர்கள் இரு நாட்டுத்
தீர்வுக்கான தங்களின் பிளவுபடாத நிலைப்பாட்டையும் அவர்கள்
புலப்படுத்தினர்.
ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் 2735வது தீர்மானத்திற்கு ஏற்ப காஸாவிலும்
லெபனானிலு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டு அமைதி
நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.


