ஷா ஆலம், நவ 19 - மாநில அரசு ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீட்டில்
தொடக்கியுள்ள சிறப்பு நிதி பட்டா பிரச்சனைக்கு குறிப்பாக பழைய
அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் சிக்கலுக்கு தீர்வு காண
உதவும்.
சுபாங் ஜெயா தொகுதியின் பிஜேஎஸ் 11 பகுதியில் உள்ள ஸ்பெக்ட்ரம்
மற்றும் இண்டா விலா அடுக்குமாடி குடியிருப்புகளை உதாரணம் காட்டிய
சுபாங் ஜெயா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸி, இந்த
குடியிருப்புகள் நிர்மாணிக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும்
பட்டா கிடைக்காத சூழல் நிலவுகிறது என்றார்.
சுபாங் ஜெயா நகராண்மைக் கழகமும் பெட்டாலிங் ஜெயா நகராண்மைக்
கழகமும் மாநகர் மன்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பாகவே இவ்விரு
குடியிருப்புகளும் தோன்றி விட்டன. இதன் காரணமாகவே
அக்குடியிருப்புகளுக்கான திட்டமிடல் அனுமதி மற்றும் கட்டிட
வரைபடத்தை நம்மால் அடையாளம் காண இயலவில்லை என அவர்
தெரிவித்தார்.
நில உரிமையாளர் அல்லது பிரதான நிலப்பட்டா இருந்த போதிலும்
மேம்பாட்டாளர் திவாலாகி விட்டார். அடுக்குமாடி குடியிருப்புக்கு
மேம்பாட்டாளரே பொறுப்பு என்பதால் இங்கு சிக்கல் நிலவுகிறது.
இந்நிலையில் கண்டு பிடிக்க முடியாத கட்டிட வரைபடத்தை மீண்டும்
வரைவதற்கு இந்த நிதி மிகவும் உதவியாக இருக்கும் என அவர்
விளக்கினார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று 2025ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட
மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
மேலும் சட்டம் 672இல் கையெழுத்திடும் கடப்பாட்டை வெளிப்படுத்திய
மாநில அரசின் நடவடிக்கையை தாம் பெரிதும் வரவேற்பதாகவும் மிஷல்
இங் கூறினார்.
அடுக்குமாடி குடியிருப்புகள் எதிர்நோக்கி வரும் பட்டாப் பிரச்சினைக்குத்
தீர்வு காண 1 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் சிறப்பு நிதி உருவாக்கப்படும்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த வெள்ளிக்கிழமை
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது
கூறியிருந்தார்.


