ஜோகூர் பாரு,நவ 18: கடந்த மே மாதம், இணைய முதலீட்டில் ஏமாற்றப்பட்ட தொழிற்சாலை மேலாளர் ஒருவர் RM943,250 இழந்தார்.
ஹோட்டல் துறையில் முதலீடு செய்யும் வாட்ஸ்அப் குழுவில் 53 வயதான பெண் இணைக்கப்பட்டார். அதில் தெரியாத நபர்களால் குறுகிய காலத்தில் அதிக மற்றும் எளிதான வருமானத்தை பெற உறுதியளிக்கப்பட்டது என ஜோகூர் காவல்துறை தலைவர் டத்தோ எம். குமார் கூறினார்.
வாக்குறுதியளிக்கப்பட்ட லாபத்தால் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை முதலீடு செய்ய RM943,250 தொகையை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு இணையப் பண பரிமாற்றம் செய்துள்ளார்.
"பணம் செலுத்தப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு அவரது முதலீடு ரிங்கிட் 600,000 லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் லாபத்தைத் திரும்பப் பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
"இருப்பினும், பாதிக்கப்பட்டவர் கோரியபடி கூடுதல் தொகையை செலுத்த மறுத்து விட்டார். மேலும், இதைப்பற்றி கடந்த சனிக்கிழமை காவல்துறையில் புகார் அளித்தார், " என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில், குறுகிய காலத்தில் அதிக வருமானத்துடன் கூடிய இணைய முதலீட்டு சலுகைகளால் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களை குமார் அறிவுறுத்தினார்.
- பெர்னாமா


