கோலாலம்பூர், நவ. 18 - செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவதற்கான
செயல்முறை எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையில் அந்த
தொழில்நுட்பம் காரணமாக உள்நாட்டு மதிப்புக் கூறுகள் மற்றும்
கலாச்சாரம் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள்
உள்ளிட்ட விவகாரங்கள் மீது இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
விவாதிக்கப்படும்.
இந்த கேள்வியை இன்றையக் கேள்வி நேரத்தின் போது பெட்டாலிங்
ஜெயா உறுப்பினர் லீ சியேன் சுங் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்
புத்தாக்கத்துறை அமைச்சரிடம் முன்வைப்பார்.
ஆட்டிஸம் மையங்களை நாடு முழுவதும் அதிகரிப்பதற்கான
அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கோல நெருஸ் பெரிக்கத்தான்
உறுப்பினர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரசாக் மகளிர், குடும்ப மற்றும்
சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் வினவுவார். அதே சமயம்,
அத்தகைய மையங்களை நடத்தும் தனியார் துறையினருக்கு எத்தகைய
உதவிகள் அல்லது ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர்
கேள்வியெழுப்புவார்.
சீன உற்பத்தி பொருளின் அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து
உள்நாட்டு தொழில்துறையினரை காப்பதற்கான அரசாங்கத்தின்
முயற்சிகள் குறித்து முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல்
அமைச்சரிடம் சிம்பாங் ரெங்கம் தொகுதி பாரிசான் நேஷனல் உறுப்பினர்
டத்தோஸ்ரீ ஹஸ்ரி விளக்கம் கேட்பார்.
2026 மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டு இயக்கத்தை
பிரபலப்படுத்துவதற்கான நீண்ட கால மற்றும் குறுகிய கால
நடவடிக்கைகள் குறித்து சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை
அமைச்சரிடம் பாலிங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் வினா
தொடுப்பார்.
மக்களவைக் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தொடங்கி எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை 35 நாட்களுக்கு நடைபெறும்.


