பாசிர் கூடாங், நவ.17: நேற்று ஜாலான் புசார்/ஜாலான் மஸ்ஜிட் போக்குவரத்து விளக்குகள் சந்திப்பில் மது போதையில் ஆடவர் ஒருவர் ஓட்டி வந்ததாக சந்தேகிக்கப்படும் கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் இறந்தனர்.
அதிகாலை 4 மணியளவில் ஹோண்டா வேரியோ ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது பெரோடுவா அல்சா கார் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது என ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் சொஹைமி இஷாக் கூறினார்.
ஜாலான் பெசார் திசையில் இருந்து பாசிர் கூடாங் நெடுஞ்சாலையை நோக்கி கார் சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
"சம்பவம் நடந்த இடத்தில் போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறமாக இருந்தபோதிலும் காரை நிறுத்தாமல் வாகனத்தை செலுத்திய ஓட்டுநரின் விதிமீறல் செயலால் இவ்விபத்து நிகழ்ந்தது.
இதனால், 37 வயதான உள்ளூர் ஆணும் மற்றும் 35 வயதுடைய பெண்ணும் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
34 வயதான கார் ஓட்டுநர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்காக கைது செய்யப்பட்டார்.
"சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது, அதில் சம்பந்தப்பட்ட ஒட்டுநர் எந்த வகை போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டது. விசாரணை இன்னும் தொடர்கிறது," என்று அவர் கூறினார்.
மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதால் சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 44(1)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


