ஜோகூர் பாரு, நவ.16 - இங்குள்ள தம்போய், பண்டார் பாரு ஊடா பகுதியில் நேற்று தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பெரிய வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டான்.
அத்த எட்டு வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மகிந்தர் சிங் கூறினார்.
நேற்று மாலை 3.51 மணியளவில் இந்த சம்பவம் குறித்து ஒரு பெண்ணிடமிருந்து தமது துறைக்கு புகார் கிடைத்தாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டச் சிறுவன் ஏழு மற்றும் எட்டு வயதுடைய இரு நண்பர்களுடன் காலவாய் ஓரம் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது தவறி கால்வாயில் விழுந்த அச்சிறுவன் அருகில் உள்ள பேரங்காடி பக்கமுள்ள பெரிய வடிகால் நோக்கி வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்..
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நாங்கள் அந்த இடத்தில் கட்டுப்பாட்டுச் சாவடியை திறந்து மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் மலேசிய சிவில் தற்காப்புப் படையுடன் தீவிரமாக தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த தேடுதல் நடவடிக்கை சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதி தொடங்கி அருகிலுள்ள நதி வரை நீண்டுள்ளது என்றும் இந்த வழக்கு -காணாமல் போன நபர் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்








