ஷா ஆலம், நவ. 15 - சிலாங்கூரின் நிதி நிலை மிகவும் வலுவாக உள்ளது.
இவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி வரை மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 437
கோடி வெள்ளியை எட்டியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
கடந்தாண்டு இறுதியுடன் ஒப்பிடுகையில் இது 75 கோடியே 14 லட்சத்து 60
ஆயிரம் வெள்ளி அதிகமாகும் என்று அவர் சொன்னார். பொருளாதாரம்
மற்றும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட
வரவு செலவுத் திட்ட திட்டமிடலுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது என்று
அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி வரை மேம்பாட்டுச் செலவினம் 69.81
விழுக்காட்டை அடைந்தது. அதே சமயம் நிர்வாகச் செலவினம் 80.57
விழுக்காட்டை எட்டியது என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம்
ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர்
தெரிவித்தார்.
இவ்வாண்டு நவம்பர் 13ஆம் தேதி வரை மாநில அரசின் வருமானம் 242.9
கோடி வெள்ளியாக அதாவது 110.43 விழுக்காடாக இருந்த வேளையில்
இவ்வாண்டிற்கான வருமான இலக்கு 220 கோடி வெள்ளியாக
நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றார் அவர்.
இக்காலக்கட்டத்தில் வரியின் மூலம் 70 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம்
வெள்ளி பெறப்பட்டது. அதில் வரி அல்லாத வருமானமாக 14 லட்சத்து 97
ஆயிரம் வெள்ளியும் வருமானம் அல்லாத தொகையாக 22 லட்சத்து 65
ஆயிரத்து 50 ஆயிரம் வெள்ளியும் பெறப்பட்டது என அவர் சொன்னார்.


