ஷா ஆலம், நவ. 15 - கடந்தாண்டு வாக்குறுதியளித்தது போல் மத்திய
அரசின் கடன் தொகையான 2 கோடியே 10 லட்சத்து 90 வெள்ளியை
மாநில அரசு முழுமையாக செலுத்தி முடித்து விட்டது.
நீர் விநியோகத் திட்டம் மற்றும் அமானா சஹாம் சிலாங்கூர் (அசாஸ்)
ஆகியவற்றை உட்படுத்திய எஞ்சிய தவணைத் தொகை அதுவாகும் என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதுதான் மாநில அரசின் கடப்பாடு. திட்டமிடுவதில் மட்டுமல்ல,
வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் உரிய கடப்பாட்டைக்
கொண்டிருக்கிறோம் என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம்
ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர்
குறிப்பிட்டார்.
நிதியுதவி மற்றும் லாபஈவு வழங்குவதன் மூலம் துணை நிறுவனங்கள்,
அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளை உள்ளடக்கிய புதிய
வருமான வியூகத்தை தொடர முடியும் என்றும் அவர் சொன்னார்.
நிதியுதவி மற்றும் லாப ஈவு பகிர்ந்தளிப்புக்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி
புசார் கழகம், சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம், வோர்ல்ட் வைட்
ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூன்று கோடி வெள்ளியை
வழங்கியுள்ளன என்றார் அவர்.


