ஷா ஆலம், நவ. 15 - அடுக்குமாடி குடியிருப்புகள் நீண்ட காலமாக பட்டா
இல்லாமல் இருக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண அடுக்குமாடி குடியிருப்பு
உரிமை சிறப்பு அறக்கட்டளை நிதியை மாநில அரசு உருவாக்கவுள்ளது.
குடியிருப்புகளைப் பதிவு செய்வதற்கு ஏற்படும் பல்வேறு செலவினங்களை
ஈடுசெய்யும் நோக்கில் இந்த நிதி உருவாக்கப்படுவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
குடியிருப்பு உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் கூடுதல் செலவிலிருந்து
இந்த பிரச்சனை உருவாகிறது என்பதை உணர்ந்து இந்த முடிவு
எடுக்கப்பட்டதாக இன்று மாநில சட்டமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான
வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு முன் குடியிருப்புகளை
வாங்கியவர்கள் எதிர்நோக்கும் பதிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்
இந்த நிதி உதவும் என்று அவர் சொன்னார்.
நிபுணத்துவ கட்டணம், பட்டா கட்டணம், நில மற்றும் கட்டிடம் தொடர்பான செலவினங்கள் மற்றும் இதர செலவினங்களை ஈடுசெய்வதற்கு ஏதுவாக இந்த அறக்கட்டளை நிதியைக் கொண்டு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார் அவர்.


