மானியம் அடுத்தாண்டு தொடங்கி ஜூலை மாதத்திற்குள் வழங்கப் படுவது
உறுதி செய்யப்படும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களை பள்ளி
நிர்வாகங்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்வதற்கு ஏதுவாக இந்த
மானியத்தை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர்
சொன்னார்.
மாநிலத்திலுள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான மானிய
விண்ணப்பங்கள் ஜூன் மாதத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை
மாத வாக்கில் வழங்குவது தொடர்பில் தாங்கள் முன்வைத்த பரிந்துரையை
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஏற்றுக் கொண்டதாக அவர்
தெரிவித்தார்.
இதனிடையே, மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அங்கீகரிக்கப்ட்ட
இவ்வாண்டிற்கான மானியம் இன்றைக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும்
விநியோகிக்கப்பட்டுவிடும் என்று பாப்பாராய்டு கூறினார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் சில தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம்
சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் அவை சரி செய்யப்பட்டு
இன்றைக்குள் அனைத்துப் பள்ளிகளும் மானியத்தை பெறுவது உறுதி
செய்யப்படும் என்றார் அவர்.
மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாநில அரசு ஆண்டு தோறும்
50 லட்சம் வெள்ளியை மானியமாக வழங்கி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நிலவரத்தில், உயர் கல்விக் கூடங்களில் பயிலும் குறைந்த
வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய
மாணவர்களுக்கான மாநில அரசின் கல்விக் கட்டண உதவித் தொகை
அடுத்த வாரத்திற்குள் முழுமையாக வழங்கப்படும் என்று பாப்பாராய்டு
தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு 600 மாணவர்களின் விண்ணப்பங்கள்
அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அத்தொகை அவர்கள் பயிலும்
உயர்கல்விக் கூடங்களுக்கு நேரடியாக அனுப்பப்படும் என்றார்.
இந்த உயர் கல்விக் கட்டண உதவித் திட்டத்தின் கீழ் 600 பேருக்கு மட்டுமே
உதவி வழங்கப்படும் வேளையில் இம்முறை சுமார் 1,500 பேரிடமிருந்து
கிடைக்கப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து
யுபென் எனப்படும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் ஒப்புதலைப்
பெறுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது என்று அவர்
தெளிவுபடுத்தினார்.
அரசாங்க மற்றும் தனியார் உயர் கல்விக் கூடங்களில் பயிலும் இந்திய
மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த திட்டத்தை மாநில அரசு
அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் டிப்ளோமா பயிலும்
மாணவர்களுக்கு கூடுதல் பட்சம் 2.000 வெள்ளியும் பட்டப் படிப்பை
மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூடுதல் பட்சம் 3,000 வெள்ளியும் ஒரு
முறை மட்டுமே என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.


