கோலாலம்பூர், நவ.15 - மலேசியாவில் எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது என்று துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
குறிப்பாக அரசியலில் பெண்களுக்கு உரிய பதவிகள் இருப்பதை உறுதிப்படுத்த மலேசியா இன்னும் தீர்க்கமான மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்றார்.
"அரசியலில் பெண்களின் அதிகப் பங்கேற்புடன், சமநிலையான தலைமைத்துவத்தால் மலேசியா பயனடையும்.
"இருப்பினும், அரசியல் கட்சித் தலைமைப் பதவியில் குறைந்தபட்சம் 30 சதவீத பெண் பிரதிநிதித்துவம் என்ற இலக்கை அடைவது என்பது மெதுவாகவே உள்ளதை காண முடிகிறது," என்று அவர் கூறினார்.
அரசியல் கட்சிகள் குறைந்தபட்சம் 30 சதவீத பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் அல்லது பெண்களுக்கு பிரத்யேக இடங்களை உருவாக்க வேண்டும் என்று தியோ பரிந்துரைத்தார்.
“தேர்தல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினால், இந்த இலக்கை விரைவாகவும் திறமையாகவும் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
இது சாத்தியமில்லாத காரியம் அல்ல, நிச்சயம் அடைய முடியும், காரணம் இந்த அணுகுமுறை மற்ற நாடுகளில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்,
- பெர்னாமா


