ஷா ஆலம், நவ. 14 - ஷா ஆலம் விளையாட்டரங்களை உடைக்கும்
விவகாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.)
முறையாகக் கடைபிடிப்படுவதோடு சுற்றுவட்டாரத்திலுள்ள வடிகால்
முறை பாதிக்கப்படாமலிருப்பதும் உறுதி செய்யப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நிலவி வரும் வானிலையையும் அதன்
விளைவாக நேற்று முன்தினம் ஷா ஆலம் வட்டாரத்தில் வெள்ளம்
ஏற்பட்டுள்ளதையும் தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக ஷா ஆலம்
விளையாட்டுத் தொகுதி (கே.எஸ்.எஸ்.ஏ.) நிர்வாகம் கூறியது.
தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்பை உறுதி
செய்வதற்காக தீவிர கண்காணிப்பு பணிகளை தாங்கள் மேற்கொண்டு
வருவதாக அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட அனைவரின் நலன் பாதுகாக்கப்படுவது மற்றும்
சுற்றுவட்டாரத்தில் எந்த பிரச்சனையும் ஏழாமலிருப்பதை உறுதி செய்வது
தங்களின் தலையாய கடமையாகும் என அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கன மழையினால்
டாமன்சாரா ஆற்றில் நீர் பெருக்கெடுத்து செக்சன் 13, ஷா ஆலம்
விளையாட்டரங்கத்தின் அருகிலுள்ள பகுதியில் இரண்டு அடி உயரத்திற்கு
வெள்ளம் ஏற்பட்டது,
கடந்த ஜூலை மாதம் தொடங்கிய ஷா ஆலம் விளையாட்டு அரங்கை
உடைக்கும் பணி தற்போது 80 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள நிலையில்
இப்பணி அடுத்தாண்டு மே மாதம் முழுமையாக முற்றுப் பெறும் என்று
விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி
கூறினார்.


